< Back
மாநில செய்திகள்
ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்வு
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்வு

தினத்தந்தி
|
20 Oct 2023 1:45 AM IST

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் உயர்ந்து உள்ளதாக கோவையில் அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.


ஒருங்கிணைப்பு கூட்டம்


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பால்வளத்துறையின் சார்பில் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர், கால்நடைகள் வளர்ப்பை இளைஞர்களிடையே ஊக்குவிக்க கடன் வழங்க வேண்டும். உணவு பாதுகாப்புத்துறையும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும் இணைந்து காலாவதியான பால் பாக்கெட்டுகளை விற்கிறார்களா?, கலப்படம் செய்து விற்கிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.


தரத்துக்கு ஏற்ப விலை


பின்னர் அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


கால்நடை வளர்ப்புக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவது, கடன் வசதிகளை செய்வது, மானியங்கள் வழங்குவது குறித்து கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் 2 லட்சம் கறவை மாடு கடன் வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பாலின் தரத்திற்கு ஏற்ப விலையை படிப்படியாக நிர்ணயித்து வருகிறோம். 10 நாட்களுக்கு ஒருமுறை கொள்முதல் செய்த பாலுக்கு பணப்பட்டுவாடா செய்து வருகிறோம்.


கோவை மண்டலத்தில் 120 ஆவின் பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கி வைத்து உள்ளேன். தமிழகத்தில் தாராளமாக பால் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பால் கொள்முதலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாலின் தரத்தை சோதனை செய்ய தனி எந்திரம் வழங்கப்படும்.


இளைஞர்களுக்கு ஊக்கம்


இளைஞர்கள் பால் உற்பத்தி செய்ய ஊக்கம் அளிக்கும் வகையில் கடன் உதவி, பயிற்சி, மாட்டுப்பண்ணை, தரமான மாடுகள் வழங்க அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதிரி பண்ணை அமைக்கப்படும். பால் பாக்கெட்டில் கசிவை தடுக்க தடிமன் அளவை உயா்த்தி உள்ளோம். இதனால் 0.2 என்ற அளவில் இருந்த கசிவை பாயிண்ட் ஜீரோ என்ற அளவில் குறைத்து உள்ளோம்.


ஆவின் பாலகங்களில் ஆவின் பொருட்களை தவிர பிற பொருட்களை விற்பனை செய்யக்கூடாது. பால் பாக்கெட்டில் பொறிக்கப்பட்ட விலையில் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்து பொதுமக்களே கேள்வி எழுப்பலாம். ஆவின் நிர்வாகத்தை சீரமைத்ததால் தமிழகத்தில் ஆவின் பால் விற்பனை 8 சதவீதம் அதிகரித்து உள்ளது.


மிகப்பெரிய சாதனை


மேலும் இந்த மாதம் மின்கட்டணம் ரூ.42 லட்சம் குறைந்து உள்ளது. இது மிகப்பெரிய சாதனை ஆகும். தீபாவளி இனிப்பு விற்பனையை பொருத்தவரை கடந்த ஆண்டை விட 25 சதவீதம் கூடுதல் ஆர்டர்கள் வந்து உள்ளது. மேலும் ஆர்டர்கள் அதிகரிக்கும். இந்த ஆண்டு ஊட்டச்சத்து நிறைந்த இனிப்புகளை தயாரித்து விற்பனை செய்ய உள்ளோம்.


இவ்வாறு அவர் கூறினார்.


இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, ஆவின் பொதுமேலாளர் பால பூபதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


முன்னதாக அன்னூர் ஊத்துப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்திற்கு ரூ.25 லட்சத்தில் பால் குளிர்விப்பான் நிலையத்தை அமைச்சர் தொடங்கி வைத்தார்.


மேலும் செய்திகள்