ஆவின் இனிப்பு விற்பனை 2 மடங்கு உயர்வு - பால்வளத்துறை அமைச்சர் நாசர் தகவல்
|பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முதல் அமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
நந்தனம்,
பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து ஒரு வாரத்திற்குள் முதல் அமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார் என்று பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு சென்னை நந்தனத்தில் ஆவின் ஊழியர்களுக்கு பணப்பயன்கள் வழங்கிய பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தீபாவளிக்கு இனிப்பு விற்பனை இரண்டு மடங்கு உயர்ந்து 110 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆவின் இனிப்பு வகைகள் நன்கு பரிசோதனை செய்த பிறகே விற்பனைக்கு அனுப்புவதாகவும் அமைச்சர் நாசர் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறும்போது, ஆவின் நிறுவனத்திற்கு போட்டி அதிகமாகியுள்ளது. ஏதாவது தவறு கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக பொய்யான தகவல்களை தினமும் பரப்புகிறார்கள்.
இவை உண்மைக்கு புறம்பான செய்தியாகும். சட்ட ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம். தவறான தகவல்கள் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முயற்சித்து வருகிறோம் என்று கூறினார்.