சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிப்பு..!
|சென்னையில் 2-வது நாளாக ஆவின் பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
சென்னையில் ஆவின் நிறுவனம் மூலம் 14 லட்சம் லிட்டர் ஆவின்பால் பாக்கெட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கிடையில், ஆவின் பால் கொள்முதல் குறைந்துள்ளதால், சென்னையில் உள்ள மாதவரம் மத்தியபால் பண்ணை, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பால் பண்ணைகளுக்கு பால் வரத்து குறைந்துள்ளது. இதனால், ஆவின் பால் விநியோகமும் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது.
இந்த நிலையில், பல்வேறு மாவட்டங்களில் இருந்து அம்பத்தூர் ஆவின் பண்ணைக்கு வரவேண்டிய பால் தாமதமாக வருவதால் இரண்டாவது நாளாக பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பால் சரியான நேரத்தில் செல்லாததால் நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பால் வரத்து குறைவின் காரணமாக பால் பாக்கெட் உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு சரி செய்யப்பட்டுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.