< Back
மாநில செய்திகள்
பாலில் கொழுப்பு திருடப்படுகிறது என்று கூறி ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்
மாநில செய்திகள்

பாலில் கொழுப்பு திருடப்படுகிறது என்று கூறி ஆவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி - அமைச்சர் மனோ தங்கராஜ்

தினத்தந்தி
|
22 Nov 2023 5:15 AM IST

ஆவின் இருக்கிற காரணத்தால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆவின் நிறுவனம் 4 வகையான பால்களை சந்தைப்படுத்தி வந்தது. டிலைட் பால் (3½ சதவீதம் கொழுப்பும்- 8½ சதவீதம் புரதம் உள்ளிட்ட சத்துக்கள் கொண்டது). இதில் விட்டமின் ஏ மற்றும் டி ஆகியவற்றை செறிவூட்டி விற்பனைக்கு கொடுக்கிறோம். இந்த பாலை சாதாரணமாக யாராக இருந்தாலும் குடிக்கும் அளவுக்கு கொழுப்பும், புரதமும் இருக்கிறது. இது எல்லோருக்கும் போதும் என்று டாக்டர்களே சொல்கிறார்கள்.

இன்னொன்று கொழுப்பு அதிகமாக வேண்டும் என்று கேட்பவர்களுக்கு நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு வண்ண பாக்கெட் பால்). அதில் கொழுப்பு அதிகமாக இருக்கும். புரதமும் இருக்கும். இந்த பாலில் கூடுதலாக கொழுப்பும், புரதமும் சேர்த்து கொடுக்கிறோம்.

சிலர் பால் கொள்முதல் குறைந்ததாக ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைக்கிறார்கள். நாங்கள் பொறுப்பேற்ற நேரத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் அதை உடனடியாக சீரமைத்து இன்று சராசரியாக 30 லட்சம் லிட்டர் பால் கையாண்டு வருகிறோம். இதையெல்லாம் பார்த்துவிட்டு வடநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் ஆகிவிட்டது. இதனால் வடநாட்டு கைக்கூலிகள் இன்றைக்கு அவதூறு பேசுகிறார்கள். இதில் எந்த உண்மையும் கிடையாது. எனவே பொதுமக்கள் எந்த பொய் பிரசாரத்தையும் நம்ப வேண்டாம்.

அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டத்தின்படி என்ன நடவடிக்கை எடுக்க முடியும்? என்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம். தேவைப்படும் பட்சத்தில் கட்டாயம் சட்டரீதியாக நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்.

நாங்கள் சராசரி கொழுப்புள்ள பால் விற்பனையை அதிகரித்து நிலைப்படுத்திய பால் விற்பனையை குறைக்கப்பார்க்கிறோம் என்றால் அது உண்மைதான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. பாலில் கூடுதலாக கொழுப்பு சேர்த்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை. அது உடல்நலத்துக்கு தேவையில்லை என்ற கருத்தின் அடிப்படையில்தான் பாலை அதன் தரத்துக்கேற்றபடி வழங்குவது என்று முடிவெடுத்து 3½ சதவீத கொழுப்புடன் செறிவூட்டப்பட்ட விட்டமின் ஏ மற்றும் டி அடங்கிய டிலைட் பாலை முன்னிறுத்துகிறோம்.

கொள்முதல், விற்பனையை அதிகப்படுத்த 2 லட்சம் கறவை மாடுகளுக்கு கடன் வழங்க திட்டமிட்டு தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன்.

ஆவின் இருக்கிற காரணத்தால்தான் பால் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை கிடைக்கிறது. தமிழ்நாட்டு பால் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் நிலையான, சீரான விலை, ஆவின் இருப்பதால்தான் கிடைக்கிறது. இந்த இரண்டையும் தகர்க்க வேண்டும் என்றால் ஆவின் இருக்கக்கூடாது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆவின் பெயரை கெடுக்கவும், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியுமா? என்று பார்க்கிறார்கள். இதையும் நாங்கள் முறியடிப்போம்.

இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்