< Back
மாநில செய்திகள்
ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது
மாநில செய்திகள்

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு: இன்று முதல் அமலாகிறது

தினத்தந்தி
|
3 March 2024 12:28 AM IST

ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது.

சென்னை,

தமிழக அரசின் பால்வளத்துறையின் கீழ் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவின் சார்பில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் பால் மட்டுமின்றி பால்கோவா, நெய், வெண்ணெய், மில்க் ஷேக், ஹெல்த் மிக்ஸ், யோகர்ட், பால் பிஸ்கட், சாக்லெட், குல்பி, கப் ஐஸ்கிரீம், சாக்கோ பார், சாக்கோ பீஸ்டு, கசாட்டா, கேன்டி, பிரீமியம் என 100-க்கும் மேற்பட்ட பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது.

வழக்கமான நாட்களில் பால், தயிர், போன்ற பொருட்களும், கோடை காலத்தில் மோர், லஸ்சி மற்றும் ஐஸ்கிரீம்கள் விற்று தீரும். இதனால் கோடை காலத்தில் ஆவின் பாலகங்களில் பால் பொருட்களுக்கு அவ்வப்போது தட்டுப்பாடு நேரிடுவது வழக்கம். இந்த தடவை கோடை காலத்தில் கடுமையான வெயில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ஐஸ்கிரீம் விற்பனை உயர வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில் ஆவின் பாலகங்களில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் விலை திடீரென உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து ஆவின் நிர்வாகம், அனைத்து விற்பனையாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதன்படி ஆவின் ஐஸ்கிரீம் விலை ரூ.2 முதல் ரூ.5 வரை விலை உயர்கிறது. அதன்படி ஆவின் சாக்கோபார் ஐஸ்கிரீம் விலை (65 மி.லி) ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆக உயர்ந்து இருக்கிறது. 125 மி.லி. கொண்ட ஆவின் வெண்ணிலா (பால்) விலை ரூ.28-ல் இருந்து ரூ.30 ஆகவும், 100 மி.லி. கொண்ட வெண்ணிலா கிளாசிக் கோன் விலை தலா ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும், 100 மி.லி. கொண்ட 'கிளாசிக் கோன்' சாக்லெட் ரூ.30-ல் இருந்து ரூ.35 ஆகவும் விலை உயர்ந்திருக்கிறது.

இந்த விலை உயர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது என்றும் ஆவின் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. கோடை காலத்தில் ஆவின் பாலகங்களில் ஐஸ்கிரீம்கள் விற்பனை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஐஸ்கிரீம்கள் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்