சேலம்
ஆக்கிரமிக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரி நிலத்தை மீட்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் மனு
|ஆக்கிரமிக்கப்பட்ட அரசு ஆஸ்பத்திரி நிலத்தை மீட்க கோரி ஆம் ஆத்மி கட்சியினர் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் மனு கொடுத்து உள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் சேலம் மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எடப்பாடி சட்டமன்ற தொகுதி தலைவர் குமரேசன், இணை ஒருங்கிணைப்பாளர் சத்தியமூர்த்தி மற்றும் கட்சி நிா்வாகிகள் கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் ஒரு மனு கொடுத்து உள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு 7½ ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு மருத்துவமனை கட்டப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அரசு ஆஸ்பத்திரிக்கு சொந்தமான 33 சென்ட் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து அதில் வணிக வளாகம் கட்டி வாடகைக்கு விட்டு உள்ளனர். மருத்துவமனையில் போதிய படுக்கை வசதி, சி.டி.ஸ்கேன் போன்ற வசதிகள் இல்லாத காரணத்தால், எடப்பாடி மற்றும் அதை சுற்றி உள்ள மக்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டு அந்த இடத்தில் சி.டி. ஸ்கேன் போன்ற உயர்தர சிகிச்சை முறைகள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.