தென்காசி
சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம்
|சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடித்தபசு திருவிழா விமரிசையாக ெகாண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் சுவாமி-அம்பாள் வீதி உலா நடந்து வருகிறது. மேலும் கோவில் உள்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை கச்சேரி, பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு மேல் அம்பாள் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.35 மணிக்கு திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கீழரதவீதியில் இருந்து புறப்பட்டு, ரதவீதிகள் வழியாக சென்று மீண்டும் நிலையத்தை அடைந்தது.
தேரோட்ட நிகழ்ச்சியில், தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன், தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் வி.எம்.ராஜலட்சுமி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஆணையாளர் சபாநாயகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. அன்று மதியம் 12 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாள் ஆடித்தபசு மண்டபத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 6.30 மணிக்கு சங்கரநாராயண சுவாமி ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடும், நள்ளிரவு 12.05 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.