ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது..!
|ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
108 வைணவ திருத்தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆகும். ஆண்டாள், பெரியாழ்வார் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குரியது இந்த ஸ்தலம். இங்கு ஆண்டு தோறும் ஆண்டாளின் அவதார தினமான ஆடி மாத பூரம் நட்சத்திரத்தன்று நடைபெறும் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி, இந்த ஆண்டுக்காண ஆடிப்பூர தேர் திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சந்நிதியில் நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ ஆண்டாள் - ரெங்கமன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின் 16 வண்டி சப்பரத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.
இன்று இரவு 16 வண்டி சப்பரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னாருடன் எழுந்தருளி வீதி உலா வருகிறார். வருகிற 17-ந் தேதி ரெங்கமன்னார் கோவர்த்தனகிரி கிருஷ்ணர் அலங்காரத்திலும், ஆண்டாள் சேஷ வாகனத்தி லும் எழுந்தருளுகின்றனர்.
18-ம் தேதி பெரியாழ்வார் மங்களாசாசனமும், அன்று இரவு 5 கருட சேவையும், 20-ம் தேதி ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனிக்கும் சயன சேவையும் நடைபெறுகிறது. 9-ம் நாள் விழாவான ஜூலை 22-ம் தேதி காலை 8.05 மணிக்கு திரு ஆடிப்பூர தேரோட்டம் நடைபெறுகிறது. இதன் ஏற்பாடுகளை செயல் அலுவலர் முத்து ராஜா, தக்கார் ரவிச்சந்திரன் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.