காஞ்சிபுரம்
ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா; 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு
|ஐயன்பேட்டை சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி 1008 பெண்கள் பால்குடம் எடுத்து வழிபாடு செய்தனர்.
ஆடிப்பூர விழா
காஞ்சீபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், ஐயன்பேட்டை கிராமத்தில் அமைந்துள்ள சக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவையொட்டி ஐயன்பேட்டையில் அமைந்துள்ள கைலாசநாதர் ஆலயத்தில் இருந்து 1008 பெண்கள் தலையில் பால்குடம் எடுத்துக்கொண்டு, கோவில் குடைகள் புடை சூழ, கேரள பம்பை மேள வாத்தியங்கள் முழங்க, மேளங்கள் ஒலிக்க ஐயன்பேட்டை கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக பிரமாண்ட ஊர்வலமாக சென்று சக்தியமனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினார்கள்.
ஆடிப்பூர பால்குட ஊர்வலத்தில் ஐயன்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சக்தி அம்மனை தரிசித்து சென்றனர்.
துர்க்கை அம்மன் கோவில்
இதேபோல், உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட சதுக்கம் பகுதியில் அமைந்துள்ள பழமைவாய்ந்த துர்க்கையம்மன் கோவிலில் ஆடிப்பூர மஹோற்சவத்தை விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலை அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து விரதமிருந்த பக்தர்கள் உத்திரமேரூர் முத்து பிள்ளையார் கோவிலிருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் பால்குடங்களுடன் ஊர்வலமாக புறப்பட்டனர்.
இந்த ஊர்வளம் நாதஸ்வர மேளதாளங்கள், தாரை தப்பட்டை வாதியங்களுடன், வானவேடிக்கைகள் முழங்க பஜார் வீதி, சன்னதி தெரு, கச்சேரித் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து துர்க்கையம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பொங்கலிட்டு அம்மனுக்கு படையலிட்டனர். மாலையில் கோமாதா பூஜை கோவில் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது இரவு அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் துர்கையம்மன் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.