கடலூர்
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
|விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூதங்களை மையமாக கொண்டு அமையபெற்ற இந்த கோவிலில் விருத்தாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உண்டு. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் அம்மனுக்கு ஆடிப்பூர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்தாண்டு ஆடிப்பூர விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.
இதையடுத்து சிறப்பு பூஜைகளுக்கு பிறகு உற்சவ மூர்த்திகள் விருத்தாம்பிகை அம்மன் சன்னதியில் உள்ள கொடி மரத்தின் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேளதாளம் முழக்கத்துடன் ஆடிப்பூர விழா கொடி ஏற்றப்பட்டது. அப்போது அங்கு திரண்டு நின்ற ஏராளமான பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
2-ந்தேதி திருக்கல்யாணம்
விழாவில் வருகிற 2-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெரும் திருவிழாவில் தினமும் சாமி, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வீதி உலா நடைபெறுகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 31-ந்தேதி தேரோட்டமும், 2-ந்தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், செயல் அலுவலர் மாலா மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.