ஆடிப்பூர விழா: திருவாரூர் தியாகராஜர் கோவிலில் அம்பாள் தேரோட்டம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
|திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி அம்பாள் தேரோட்ட விழா இன்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.
திருவாரூர்,
திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், சர்வதோஷ பரிகார தலமாகவும் விளங்கிறது. இந்த சிறப்புமிக்க கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்புர விழா கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஆடிப்புர விழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கேடக உற்சவம், பூத வாகனம், யானை வாகனம், ரிஷப வாகனம், கைலாச வாகனம்; ஆகியவற்றில் அம்பாள் வீதி உலா நடந்தது.
இதன் தொடர்ச்சியாக இன்று அம்பாள் தேரோட்ட விழா நடந்தது. விழாவையொட்டி காலை 9.30 மணி அளவில் கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். மாலை 3.30 மணிக்கு வான வெடிகள் முழுங்கி ஆருரா, கமலாம்பாள் என ஆயிரகணக்கான பக்தர்கள் கோஷங்கள் அதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழவீதியில் இருந்து புறப்பட்டு தெற்குவீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக தேர் நிலையை அடைந்தது. இதனை தொடர்ந்து தேரில் இருந்து அம்பாள் புறப்பட்டு கோவிலை அடைந்தார்.