சென்னை
முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் - திரளான பக்தர்கள் தரிசனம்
|ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
சென்னை,
ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.சென்னை,
ஆடி கிருத்திகையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்கள் விழாக்கோலம் பூண்டிருந்தது. அதிகாலை முதலே திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்து முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் பள்ளியெழுச்சி பூஜை, அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. மதியம் 12 மணிக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து, ராஜ அலங்காரத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார்.
அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, முருக பெருமானை தரிசனம் செய்தனர். முதியோர்கள், கர்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு மேற்கு நுழைவாயலில் சிறப்பு பாதை அமைக்கப்பட்டு, தரிசனத்துக்கு ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.
பக்தர்கள் காவடி, பால் குடம் எடுத்தும், நாவில் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். சிறுவர்கள் பலர் பூ காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அர்ப்பணித்து வழிபாடு நடத்தியதை பார்க்க முடிந்தது. பக்தர்கள் வசதிக்காக கோவிலில் பகலில் நடை சாத்தப்படாமல் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள முருகன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பாரிமுனையில் உள்ள கந்தக்கோட்டம் முருகன் கோவிலில் காலை முதலே ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் மேற்கொண்டனர்.
இதேபோல் திருத்தணி, குன்றத்தூர், சிறுவாபுரி முருகன் கோவில் உள்பட சென்னை மற்றும் சென்னை புறநகர், காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.