ஆடி ஞாயிற்றுக்கிழமை: பக்தர்களால் நிரம்பிவழிந்த அக்னி தீர்த்த கடற்கரை...!
|ஆடி ஞாயிற்றுக்கிழமையொட்டி அக்னி தீர்த்த கடல் பகுதியில் நீராட பக்தர்கள் குவிந்தனர்.
ராமேசுவரம்,
அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாட்களில் பக்தர்களின் கூட்டம் வழக்கத்திற்கு அதிகமாகவே இருக்கும்.
இந்த நிலையில் ஆடி ஞாயிற்று கிழமை மற்றும் விடுமுறை நாளான இன்று ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராட பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட மிக அதிகமாகவே இருந்தது.
அக்னி தீர்த்த கடலில் குவிந்த பக்தர்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் அளித்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்துள்ளனர்.
அதைபோல் ராமநாத சுவாமி கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். தனுஷ்கோடி அரிச்சல் முனை கம்பிப்பாடு கடற்கரை பகுதியிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.