ஆடி மாத பவுர்ணமி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம்..!
|கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
இந்த நிலையில், ஆடி மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 3.25 மணிக்கு தொடங்கியது. கிரிவலம் தொடங்கியதில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. 14 கிலோ மீட்டர் கிரிவலப்பாதையில் பக்தர்கள் வெள்ளம் போல கிரிவலம் சென்று கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இன்று தொடங்கிய பவுர்ணமி நாளை (புதன்கிழமை) அதிகாலை 1.05 மணிக்கு நிறைவு பெறுகிறது. இதனால் பக்தர்களின் கூட்டம் இன்னும் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலம் செல்லும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். பாதுகாப்பு பணிக்காக ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.