விழுப்புரம்
சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா
|செஞ்சி சுப்பிரமணியசாமி கோவிலில் ஆடி கிருத்திகை விழா நடைபெற்றது. இதில் பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
செஞ்சி,
செஞ்சி திருவண்ணாமலை சாலை பி ஏரி கரையில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 50-ம் ஆண்டு ஆடி கிருத்திகை விழா கடந்த 2-ந்தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடி கிருத்திகை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி எம்.ஜி.ஆர். நகர் மாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் 108 பால்குடங்களை ஊர்வலமாக சுப்பிரமணியசாமி கோவிலுக்கு எடுத்து வந்தனர்.
பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. மேலும் பலர் அக்னி சட்டி ஏந்தி ஊர்வலமாக வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு மிளகாய் பொடி கரைசல் அபிஷேகமும், தீமிதி திருவிழாவும் நடைபெற்றது.
நேர்த்திக்கடன்
இதையடுத்து 3 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசாமி வீதிஉலா நடைபெற்றது. அப்போது திரளான பக்தர்கள் பறக்கும் காவடி எடுத்தும், பொக்லைன் எந்திரம், நெல் அறுவடை எந்திரம் உள்ளிட்டவற்றை இழுத்தும், ஊர்வலமாக கோவிலுக்கு வந்து சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட நெல், அரிசி, மணிலா வியாபாரிகள் மற்றும் எடைப்பணி தொழிலாளர்கள், கிராம மக்கள் செய்து இருந்தனர்.