விருதுநகர்
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா
|சதுரகிரியில் நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் நடைபெற்ற ஆடி அமாவாசை திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
ஆடி அமாவாசை திருவிழா
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரியில் சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
அதேபோல இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நேற்று நடைபெற்றது. ஆடி அமாவாசை திருவிழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.
இதையடுத்து அதிகாலை 3.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலைப்பாதை வழியாக சாமி தரிசனம் செய்ய சென்றனர். தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதையிலும், மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதையிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்றனர்.
சிறப்பு அபிஷேகம்
தாணிப்பாறை அடிவாரப்பகுதிகளில் உள்ள தோப்புகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ஆடி அமாவாசையையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 21 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சுந்தர மகாலிங்க சுவாமி, சந்தன மகாலிங்க சுவாமி, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு மலைப்பாதைகளில் 5 இடங்களில் குடிநீர் வசதிகளும், ஆங்காங்கே தன்னார்வலர்கள் குடிநீரும் கொடுத்தனர்.
பாதுகாப்பு பணி
அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் மதுரை, தேனி, சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி, உசிலம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மலை அடிவாரமான தாணிப்பாறைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மலை அடிவாரத்தில் விருதுநகர் மாவட்ட போலீசாரும், மலை உச்சியில் இருந்து அடிவாரம் வரை மதுரை மாவட்ட போலீசாரும், நீரோடை பகுதிகளில் தீயணைப்பு துறையினர், வனத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அன்னதானம்
சந்தேகப்படும் நபர்கள் மலைப்பகுதிக்குள் யாரும் ெசல்கிறார்களா என 60-க்கும் மேற்பட்ட நக்சலைட் தடுப்பு சிறப்பு போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, கோவில் செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.