ஆடி அமாவாசை: சதுரகிரி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு
|ஆடி அமாவாசை விழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி அமாவாசை திருவிழாவானது மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 28-ந் தேதி ஆடி அமாவாசை விழா நடைபெற உள்ளது.
இதையடுத்து பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்வதற்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தாணிப்பாறை அடிவாரப்பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் மலையேறி சென்று சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்யப்பட்டுள்ளது.
பக்தர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும், போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாகவும், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, சாத்தூர், விருதுநகர், டி.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி மற்றும் மதுரை ஆகிய இடங்களிலிருந்து வாகனங்களுக்கு தாணிப்பாறை விலக்கு வரை இரு வழிச் சாலைகளும், தாணிப்பாறை விலக்கில் இருந்து தாணிப்பாறை அடிவாரத்தின் அருகில் உள்ள தற்காலிக பஸ் நிலையம் வரை வாகனங்கள் வருவதற்கும் மகாராஜபுரம் விலக்கு வழியாக திரும்பிச் செல்வதற்கும் என ஒரு வழி சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தாணிப்பாறையில் இருந்து 5 கிலோ மீட்டருக்கு முன்பாகவே ஒரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் அருகிலேயே ஆட்டோ, வேன், கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு என்று தனித்தனியாக வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அரசு பஸ்சை பயன்படுத்துபவர்களுக்கு என்று தாணிப்பாறையை அடுத்து கோவில் நுழைவு வாயிலுக்கு 800 மீட்டர் முன்பாக மற்றொரு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் வரை அரசு வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும், தனியார் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
கோவிலுக்குச் செல்ல கோவில் நுழைவுச் சீட்டு ஏதும் வழங்கப்படாது. பக்தர்கள் யாத்திரை செல்லும்போது ஏதேனும் அசம்பாவிதங்கள் நேரிடும் பட்சத்தில் அருகில் உள்ள அரசு அதிகாரிகள் கொண்ட குழுக்களிடம் தகவல் தெரிவிக்கலாம்.
மேலும் பக்தர்களுக்கென அமைக்கப்பட்ட அடிப்படை வசதிகள், பஸ் நிறுத்துமிடங்கள், வாகனங்கள் முறையாக எந்தெந்த வழித்தடங்கள் வழியாக செல்ல வேண்டும் போன்ற விவரங்கள் அடங்கிய விளம்பர பதாகைகள் அழகாபுரி, மகாராஜபுரம் விலக்கு, தாணிப்பாறை விலக்கு, வத்திராயிருப்பு பஸ் நிறுத்தம் மற்றும் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் வைக்கப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே மருத்துவ வசதி, கழிப்பிட வசதிகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். வனப்பகுதியில் பக்தர்கள் பிளாஸ்டிக் பைகள் கொண்டு செல்வதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் இரவு நேரங்களில் கோவிலிலும், வனப்பகுதியிலும் தங்குவதற்கு அனுமதி கிடையாது, பக்தர்களின் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, கோவிலிருந்து (தற்காலிக பஸ் நிலையத்திலிருந்து) மாவட்டத்தின் முக்கிய பகுதிகளுக்கு 24 மணி நேரமும் இரவு நேரங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். ஆனால் மற்ற பகுதிகளில் இருந்து இரவு நேரங்களில் கோவில் செல்வதற்கு பஸ்கள் இயக்கப்படாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
திருவிழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு பொது மக்கள் நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் வனப்பகுதியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி கேட்டுக் கொண்டுள்ளார்.