ஆடி அமாவாசை: நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்கள்....!
|ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
சென்னை,
எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்த தருணத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாக குறிப்பிடப்படுகிறது.
முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த தர்ப்பணம் நிகழ்ச்சிகள் மூலம், முன்னோர்களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை நாளில் ஏராளமான மக்கள் நீர்நிலைப் பகுதிகளில் தர்ப்பணம் கொடுப்பார்கள்.
இந்த நிலையில், ஆடி அமாவாசை தினமான இன்று ஆறுகள் மற்றும் கடல்கள் உள்ளிட்ட நீர்நிலைகளில் பக்தர்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், தாமிரபரணி ஆற்றில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.
ராமேசுவரம் அக்னிதீர்த்த கடற்கரையில் ஏராளமான மக்கள் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
மயிலாடுதுறையில் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பூம்புகார் சங்கமுக தீர்த்தத்தில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். காவிரி ஆறு பாயும் சேலம், திருச்சி, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களிலும் மக்கள் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.