< Back
மாநில செய்திகள்
ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு
மாநில செய்திகள்

ஆடி அமாவாசை திருவிழா: சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

தினத்தந்தி
|
23 July 2024 7:56 AM IST

சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4-ந்தேதி நடைபெறுகிறது.

பாபநாசம்,

பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற காரையாறு காணிகுடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை திருவிழா வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் நேற்று கால்நாட்டு விழா நடந்தது.

இதையொட்டி திருவிழா கண்காணிப்பு அலுவலரும், சேரன்மகாதேவி உதவி கலெக்டருமான அர்பித் ஜெயின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு வருகிற 31-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரையிலும் மணிமுத்தாறு அருவி, அகஸ்தியர் அருவி மற்றும் மாஞ்சோலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னேற்பாடு பணிகள் மற்றும் தூய்மை பணிகள் காரணமாக வருகிற 31-ந் தேதி, 1-ந் தேதி ஆகிய 2 நாட்கள் பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு பேருந்து, தனியார் பேருந்து உள்பட எவ்வித வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.

திருவிழாவையொட்டி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் கோவில் நிர்வாகத்தில் அனுமதி பெற்று பக்தர்கள் குடில்கள் அமைக்கலாம், தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் குடில்கள் அமைக்கவோ, தங்கவோ அனுமதி இல்லை. தனிநபர்கள் இடங்களை ஆக்கிரமித்து குடில்கள் அமைத்து பக்தர்களிடம் அதிக தொகை கேட்டு புகார்கள் வரப்பெற்றால் வனத்துறை மற்றும் காவல் துறையால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், முறைகேடாக அமைக்கப்படும் குடில்களும் அகற்றப்படும்.

ஆகஸ்டு 2-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 2-ந் தேதி மாலை 4 மணி முதல் 5-ந் தேதி வரை தனியார் வாகனங்கள் எதுவும் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து அனுமதிக்கப்படாது. இக்காலத்தில் கோவிலுக்கு செல்லக்கூடிய பக்தர்கள் பொது போக்குவரத்து மற்றும் அரசு பஸ்சில் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

மீண்டும் ஆகஸ்டு 6-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரை தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. ஆகஸ்டு 7, 8 ஆகிய இரு தினங்கள் தூய்மை மற்றும் உழவார பணிகள் காரணமாக பொதுமக்கள் பாபநாசம் சோதனை சாவடியை கடந்து செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு 9-ந் தேதி முதல் மீண்டும் பக்தர்கள் வழக்கம்போல் தங்களது தனியார் வாகனங்களில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

கோவில் தவிர்த்து வனப்பகுதிக்குள்ளும், ஆற்றின் ஆழமான பகுதிகளுக்கும் செல்ல அனுமதி இல்லை. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள், கெமிக்கல் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்கள், மண்எண்ணெய், மாசு ஏற்படுத்தும் பொருட்கள், மது, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு செல்லவும் தடை செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்