விருதுநகர்
ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரம்
|சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
வத்திராயிருப்பு,
சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆடி அமாவாசை திருவிழா
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா 2 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 28-ந் தேதி நடக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்ள இன்று முதல் 30-ந் தேதி வரை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை மலை அடிவாரப்பகுதிக்கு செல்வதற்காக மதுரை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் இயக்கப்படுகிறது.
பாதுகாப்பு பணி
தாணிப்பாறை வனத்துறை கேட்டின் அருகில் மருத்துவக் குழு, தகவல் மையம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் வனத்துறை கேட்டின் முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் வரிசையாக செல்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மலைப்பாதையில் 5 இடங்களில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணியில் விருதுநகர், மதுரை மாவட்ட போலீசார், வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நீர் ஓடை பகுதிகளில் பக்தர்கள் கடப்பதற்காக வனத்துறை சார்பில் கயிறு கட்டப்பட்டு வனத்துறையினர், போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
அடிப்படை வசதி
பக்தர்கள் காலை 5 மணி முதல் மாலை 3 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் செய்து வருகின்றனர். பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பிரதோஷம் மற்றும் ஆடி அமாவாசையன்று சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.