< Back
மாநில செய்திகள்
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்
கடலூர்
மாநில செய்திகள்

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்

தினத்தந்தி
|
18 Aug 2022 12:44 AM IST

கடலூர் மாவட்டத்தில் ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க வேண்டும் என வாக்காளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள விவரங்களை உறுதி செய்வதற்காகவும், ஒரே வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுவதை தடுத்திடவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன்படி அனைத்து வாக்காளர்களும் தாமாக முன் வந்து தங்கள் ஆதார் எண்ணினை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள படிவம்-6பி பூர்த்தி செய்து, வாக்காளர்கள் தங்களது ஆதார் அட்டை நகலுடன் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிப்பதன் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம்.

இணையதள முகவரி

மேலும் வாக்காளர்கள் https://www.nvsp.in/என்ற இணையதளம் மற்றும் Voters Helpline App மூலமும் தங்கள் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அட்டையுடன் இணைத்து கொள்ளலாம். ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, இந்திய கடவுச்சீட்டு, வங்கி மற்றும் அஞ்சலகங்களின் புகைப்படத்துடன் கூடிய கணக்குப் புத்தகம், தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட சுகாதார காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் படி வழங்கப்பட்ட இருப்பிட அடையாளச் சான்று, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய, மாநில பொதுத்துறை நிறுவனங்கள் வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணிக்கான அடையாள அட்டை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல்சபை உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை, இந்திய அரசாங்கத்தின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையால் வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள அட்டை ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றினை அளிக்கலாம்.

புதிய வாக்காளர்

மேலும் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு புதிய மற்றும் இளம் வாக்காளர் சேர்க்கையை நடத்தி வருகிறது. இதனால் ஜனவரி 1-ந் தேதிக்கு பிறகு 18 வயது நிறைவடைந்த வாக்காளர்கள், அடுத்த ஆண்டு வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை காத்திருந்து தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து வந்தனர். இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் ஆகிய மாதங்களில் 1-ந் தேதிகளை தகுதி நாளாக கொண்டு வாக்காளர்கள் தங்களது பெயர்களை பட்டியலில் பதிவு செய்து கொள்ளலாம்.

ஆகவே மேற்படி தகுதி நாட்களில் 18 வயது நிறைவடையும் வாக்காளர்கள் அனைவரும் தங்களது பெயர்களை, வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்