< Back
மாநில செய்திகள்
ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு:  மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள்  பொதுமக்கள் கருத்து
தேனி
மாநில செய்திகள்

ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிப்பு: மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் பொதுமக்கள் கருத்து

தினத்தந்தி
|
26 Nov 2022 12:15 AM IST

மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என அறிவிக்கப்பட்டதால் மின்கட்டணம் செலுத்துவதில் ஏற்படும் சிரமங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதார் கார்டு என்பது நாட்டு மக்களின் அடையாளமாக மட்டுமின்றி அரசு திட்டங்கள், மானியங்களில் முறைகேடுகளைத் தடுக்கும் ஆயுதமாகவும் மாறி இருக்கிறது.

சமையல் கியாஸ் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கட்டாயமானவுடன் ஒரு கோடி போலி இணைப்புகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டன.

இணைப்பது கட்டாயம்

தற்போது வங்கிக் கணக்கு எண், வருமான வரிக் கணக்கு எண், வருங்கால வைப்பு நிதி எண், வாக்காளர் அடையாள அட்டை எண் வரிசையில், தமிழ்நாட்டில் மின் நுகர்வோர் எண்ணுடனும் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது.

அதன்படி இனி மின்சார கட்டணம் செலுத்துகிறவர்கள் ஒவ்வொருவரும் தங்களது ஆதார் எண்ணை இணைய தளத்தின் வழியாக இணைப்பது அவசியமாகிறது.

ஏற்கனவே 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந்தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த உத்தரவு கடந்த 15-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.

இதுபற்றி மக்கள் கருத்தை அறிய முயன்றபோது பெரும்பாலானோர் 'அப்படியா? எங்களுக்கு ஒன்றும் தெரியாதே...யாரும் சொல்லலேயே..!' என்று அப்பாவித்தனமாகக் கேட்டனர்.

அமைச்சர் விளக்கம்

தற்போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tnebltd.gov.in/adharupload இணைய வழி மூலம் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின்சார கட்டணத்தை கட்ட முடியும் என்று கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

ஆதார் எண் இணைப்பு 100 யூனிட் இலவச மின்சாரத்தை பறிக்கும் முயற்சியா? என்று வீட்டு வாடகைத்தாரர்களின் மத்தியில் அச்சம் எழுந்த வேளையில், மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி, 'ஒரு நுகர்வோர் 3 முதல் 5 வீடுகள் வைத்திருந்தாலும் கூட ஆதார் எண்ணை இணைக்கும் போது 100 யூனிட் மானியம் மின்சாரம் தொடரும். ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படும் என்று பரப்பப்படுவது வெறும் வதந்தி' என்று விளக்கம் அளித்தார்.

எனினும் மக்கள் மத்தியில் குழப்பமும், அச்சமும் தொடர்ந்து வரும் வேளையில், 'ஆன்லைன்' மூலம் ஆதார் எண்ணை இணைப்பதிலும் அவ்வப்போது தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டு மின்நுகர்வோர்களை பரிதவிக்கவிட்டு வருகிறது.

4 லட்சத்து 45 ஆயிரம் இணைப்புகள்

தேனி மாவட்டத்தில் வீடுகள், குடிசைகள், விசைத்தறி, விவசாயம் போன்ற பயன்பாட்டுக்காக 4 லட்சத்து 45 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மின் இணைப்புகளுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் வணிக பயன்பாட்டுக்காக சுமார் 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த ஆதார் எண் இணைப்பு பணிகள் ஆன்லைன் மூலமும், மின் கட்டணம் செலுத்தச் செல்லும் போது நேரடியாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த விவரம் தெரியாமல் வழக்கம்போல் மின் கட்டணம் செலுத்தச் செல்லும் மக்களிடம், மின்வாரிய ஊழியர்கள் ஆதார் எண் விவரங்களை கேட்கின்றனர். ஆதார் அட்டை எடுத்துச் செல்லாத மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். அந்த வகையில் கடந்த சில நாட்களாக தினமும் பலர் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். மின்வாரிய அலுவலகங்களில் இதற்கான பணிகளும் மந்தமாக நடந்து வருகின்றன. மின்வாரிய இணையதளத்தை ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சூழலில் இந்த இணைப்பு பணி தாமதம் ஆகிறது. இதனால், நீண்ட நேரம் காத்திருந்து பொறுமை இழந்து பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் மின் கட்டணம் செலுத்தாமலும் திருப்பிச் செல்கின்றனர்.

பரிதவிக்க வைத்துள்ள இந்த ஆதார் எண் இணைப்பு நடவடிக்கைகள் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்தனர்.

அதன் விவரம் வருமாறு:-

கால அவகாசம்

வடமலைமுத்து (ஓய்வு பெற்ற ஆசிரியர், சிலமலை) :- மின்வாரிய சீர்திருத்தத்துக்காக ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது வரவேற்கத்தக்கது தான். ஆனால், எந்தவொரு சீர்திருத்தத்தையும் நடைமுறைக்கு கொண்டு வரும் முன்பு மக்களிடம் அது எதற்காக செய்யப்படுகிறது என்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். போதிய கால அவகாசமும் கொடுக்க வேண்டும். கால அவகாசம் கொடுக்காமல் நடைமுறைக்கு கொண்டு வருவது மக்களை குழப்பத்திலும், தேவையற்ற பயத்திலும் ஆழ்த்தும். தற்போதைய சூழலில் ஆதாரை இணைத்தால் தான் மின் கட்டணம் செலுத்த முடியும் என்பதை கைவிட்டு, போதிய கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதுவரை ஆதார் எண் இணைக்காதவர்களும் மின்கட்டணம் செலுத்தும் பழைய நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

வினோத் (தேனி) :- நான் வாடகை வீட்டில் வசிக்கிறேன். வாடகை வீட்டில் வசிப்பவர்களும் மின்இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல. 100 யூனிட் இலவச மின்சாரம் பெறும் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்கவே இந்த வேலை நடப்பதாக கருதுகிறேன். தற்போது வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு, ஆதார் எண்ணை இணைத்து விட்டு சில மாதங்களில் வேறு வீட்டுக்கு மாறிச் செல்லும் போது, அந்த வீட்டின் இணைப்போடும் ஆதார் எண்ணை இணைக்கும் நிலை உருவாகலாம். ஏற்கனவே ஆதார் எண் இணைத்த வீட்டில், புதிதாக குடியேறும் நபர்கள் ஆதார் இணைப்பை புதுப்பிக்காமல் இருக்கவும் வாய்ப்புள்ளது.

கணக்கீட்டு பணியின்போது ஆதார் இணைக்கலாம்

முரளிதரன் (முன்னாள் ராணுவ வீரர், கம்பம்) :- மின்சார இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை ஆன்லைன் வழியாக இணைப்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. ஆதார் எண்ணை இணைக்க முடியாதவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியவில்லை. இது மின் சந்தாதாரர்களுக்கு மன உளைச்சலை கொடுக்கிறது. இந்த ஆதார் இணைப்பு பணி எதற்காக மேற்கொள்ளப்படுகிறது என்பதே பெரும்பாலான மக்களுக்கு தெரியவில்லை.

ஆதார் எண் இணைப்பதில் உள்ள சிக்கல் காரணமாக மின் கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் கடந்து விட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படுமோ என்ற அச்சமும் உள்ளது. ஆன்லைன் மூலம் இணைக்கும் போது தாமதம் ஏற்படுகிறது. எனவே, வீடுதோறும் மின்வாரிய பணியாளர்கள் கணக்கீடு பணி மேற்கொள்ளும் போது அதோடு சேர்த்து ஆதார் எண் இணைக்கும் பணியையும் மேற்கொள்ளலாம். இது மக்களுக்கு அலைச்சலையும், தேவையற்ற பதற்றத்தையும் குறைக்கும்.

செங்கிஷ்கான் (கூடலூர்) :- டீக்கடையில் தினக்கூலியாக வேலை பார்ப்பதால் வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். வீட்டின் உரிமையாளர்கள் தங்களின் ஆதார் எண்ணை இணைக்கலாம். ஆனால், வாடகைக்கு குடியிருப்பவர்கள் இணைக்க வேண்டும் என்று சொல்வது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று புரியவில்லை. இதுகுறித்து மக்களுக்கு தெளிவாக விளக்கமும் அளிக்கப்படாமல் உள்ளது. வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இது கசப்பான செய்தியாக உள்ளது. இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மின்வாரியம் ஆராயுமா?

மின்சார கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கட்டணத்தை செலுத்த முடியும் என்று அறிவிப்பால் மின் நுகர்வோர்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். சில மின்நுகர்வோர்களின் ஆதார் எண் 'லிங்க்' ஆகாததால் அவர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மின்சார கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அபாரத நடவடிக்கை, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற பிரச்சினைகளை மின்நுகர்வோர்கள் சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே இப்பிரச்சினைகளை மின்சார வாரியம் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மின்நுகர்வோர்களின் பிரதான கோரிக்கையாக இருக்கிறது.

Related Tags :
மேலும் செய்திகள்