திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேரின் ஆதார் எண் இணைப்பு
|திண்டுக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 41 ஆயிரம் பேரின் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.
வாக்காளர்களின் ஆதார் எண்ணை, வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வாக்காளர் பட்டியலில் ஆதார் எண்களை இணைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில், திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வீடு, வீடாக சென்று வாக்காளர்களிடம் ஆதார் எண்ணை பெறும் பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் விடுமுறை நாட்களில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி விடுமுறை நாளான இன்று மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 115 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 1 லட்சத்து 2 ஆயிரத்து 220 பேர் வாக்காளர் பட்டியலில் இணைப்பதற்காக தங்களின் ஆதார் அட்டை நகல்களை வழங்கினர். தொடர்ந்து அவர்களின் ஆதார் எண்கள் வாக்காளர் பட்டியலில் இணைக்கப்பட்டன.
மாவட்டம் முழுவதும் மொத்தம் 18 லட்சத்து 67 ஆயிரத்து 678 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தற்போது வரை 6 லட்சத்து 41 ஆயிரத்து 942 பேரின் ஆதார் எண் விவரங்கள் வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.