மதுரை
பி.எம்.கிசான் திட்ட உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம்-கலெக்டர் தகவல்
|பி.எம்.கிசான் திட்ட உதவி பெற ஆதார் இணைப்பு அவசியம் என்று கலெக்டர் தகவல் தெரிவித்தார்
கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் 66 ஆயிரத்து 164 விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். விவசாயிகளுக்கு 13 தவணைகள் வரை தொகை விடுவிக்கப்பட்டு, விரைவில் 14-வது தவணை விடுவிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் இதுவரை வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள் உடனடியாக இணைத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுவரை 8654 விவசாயிகள் ஆதார் எண் விவரத்தை வங்கி கணக்குடன் இணைக்காமல் உள்ளனர். தங்களது ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைத்துள்ள விவசாயிகள் பி.எம்.கிசான் வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து ஓ.டி.பி. மூலம் சரிபார்ப்பு செய்யலாம் அல்லது அருகிலுள்ள இ-சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் ஆதார் எண் விவரங்களை உள்ளீடு செய்து விரல் ரேகை பதிவு செய்து விவரங்களை சரிபார்ப்பு செய்யலாம். மேலும் பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டும் இ-கே.ஒய்.சி. செய்யலாம். மேலும், அருகிலுள்ள இந்தியா போஸ்ட் பேமன்ட் பேங்கினை அணுகியும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளலாம். எனவே, இதில் ஏதேனும் ஒரு முறையில் பயனாளிகள் விரைவில் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் இ-கே.ஓய்.சி. செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு வட்டார அளவிலான வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.