அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு ஆதார் பதிவு திட்டம்-தமிழக அரசு உத்தரவு
|‘பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் மாணவர்களுக்கு படிக்கும் பள்ளியிலேயே ஆதார் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சென்னை,
அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்களை அந்தந்த பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது. தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆதார் அட்டையை வழங்கிடுவது அவசியமாகும். குறிப்பாக 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து நிலை மாணவர்களும், இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயில ஏதுவாக, உதவித்தொகைகள் மற்றும் ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வுதவி மற்றும் ஊக்கத்தொகை அனைத்தும், மாணவ, மாணவிகளுக்கு குறித்த நேரத்தில் முறையாக சென்று சேர்வதை உறுதி செய்யும் விதமாக, நேரடி பயனாளர் பரிமாற்றம் (டி.பி.டி.) மூலம் பயனாளர்களின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்திடும் முறை நடைமுறையில் உள்ளது.
'பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு' என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ், அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் அந்தந்த பள்ளியிலேயே ஆதார் எண் பெறுவதற்கும், புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகளுக்கும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தைக் (எல்காட்) கொண்டு செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. அப்பணிகளுக்காக எல்காட் நிறுவனம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்களுக்கான பணிகள் மற்றும் பொறுப்புகள் குறித்த நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்திடம் இருந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் 770 ஆதார் பதிவு கருவிகளைக் கொள்முதல் செய்து எல்காட் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களை எல்காட் நிறுவனம் தெரிவு செய்து, அவர்களுக்கு பயிற்சியை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில், "பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு'' என்ற சிறப்பு முன்னெடுப்பானது, வரும் கல்வி ஆண்டின் பள்ளி தொடக்க நாளான 6.6.2024 அன்று அனைத்து மாவட்டங்களில் உள்ள வட்டாரங்களிலும் முழுவீச்சில் செயல்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.