< Back
மாநில செய்திகள்
விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வண்டலூருக்கு வரும் வரிக்குதிரை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து வண்டலூருக்கு வரும் வரிக்குதிரை

தினத்தந்தி
|
2 Jun 2023 2:09 PM IST

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மேற்கு வங்கத்தில் இருந்து ஒரு ஜோடி வரிக்குதிரை வண்டலூர் பூங்காவுக்கு கொண்டுவரப்படுகிறது.

கோரிக்கை

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2,300-க்கும் மேற்பட்ட விலங்குகள் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதை தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து பார்த்து செல்கின்றனர். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த 18 வயதுடைய டீனா என்ற பெண் வரிக்குதிரை கடந்த ஆண்டு மே மாதம் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்தது. பூங்காவில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்த டீனா வரிக்குதிரையின் இருப்பிடம் ஒரு ஆண்டாக வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் வரிக்குதிரை உயிரிழந்த தகவல் தெரியாமல் வரிக்குதிரையை பார்க்க அதனுடைய இருப்பிடத்திற்கு சென்றால் பூங்கா ஊழியர் பார்வையாளர்களிடம் இருந்த ஒரே ஒரு வரிக்குதிரை இறந்துவிட்டது என்று தெரிவிப்பதால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பெரிதும் ஏமாற்றம் அடைகின்றனர்.

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்கள் சுற்றுலா பயணிகள் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு வேறு மாநிலத்தில் இருந்து வரிக்குதிரை கொண்டு வர வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ்

இதுகுறித்து உயிரியல் பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில்:-

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரிக்குதிரை இல்லாமல் இருப்பதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவதை தவிர்க்கும் வகையில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்திடம் அனுமதி பெற்று மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அலிபூர் உயிரியல் பூங்காவில் இருந்து ஒரு ஜோடி வரிக்குதிரை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மிக விரைவில் கொண்டுவரப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் விலங்குகள் பரிமாற்ற திட்டத்தின் கீழ் மைசூரு உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு சிங்கம் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்