< Back
மாநில செய்திகள்
10-ம் வகுப்பு மாணவியை கடத்தி வீட்டில் சிறை வைத்த வாலிபர்... பரபரப்பு தகவல்கள்
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி வீட்டில் சிறை வைத்த வாலிபர்... பரபரப்பு தகவல்கள்

தினத்தந்தி
|
13 May 2024 9:29 PM IST

10-ம் வகுப்பு மாணவியை கடத்தி சென்று வீட்டில் சிறை வைத்த வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். அந்த சிறுமி கடந்த வாரம் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரை பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் சிறுமி நேற்று முன்தினம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். இதுபற்றி போலீசார் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பெற்றோர் விரைந்து வந்து சிறுமியை பார்த்து கட்டிப்பிடித்து கதறி அழுதனர். தொடர்ந்து போலீசார் மாணவியிடம் மாயமானது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது இந்த சிறுமிக்கும், இறச்சகுளம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மாணவியை அந்த வாலிபர் ஆசை வார்த்தைகள் கூறி திருநெல்வேலிக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து நாகர்கோவிலுக்கு அழைத்து வந்து நண்பர்கள் உதவியுடன் ஒரு வீட்டில் அடைத்து வைத்திருந்தார்.

பின்னர் அந்த வாலிபர் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து சிறுமி அந்த வீட்டில் இருந்து தப்பி வந்து ஒரு ஆட்டோ டிரைவரிடம் செல்போனை வாங்கி வாலிபரை தொடர்பு கொண்டு பேசினார். அப்போதும் அந்த வாலிபர் சிறுமி இருக்கும் இடத்துக்கு வரவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சிறுமி போலீஸ் நிலையத்துக்கு வந்து ஆஜரானது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

சிறுமிக்கு 15 வயது என்பதால் அவரை கடத்தி சென்ற வாலிபர் மற்றும் அவருக்கு உதவிய நண்பர்கள் என 5 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனிடையே தலைமறைவாக இருக்கும் வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிறுமியை வாலிபர் கடத்தி சென்று வீட்டில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்