திருவள்ளூர்
மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபர் கைது
|திருத்தணியில் மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் டாஸ்மாக் மது பாட்டில்களை மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து காலை மற்றும் இரவு நேரங்களில் கூடுதல் விலைக்கு விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீபாஸ் கல்யாண்க்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. இதனையடுத்து அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை தலைமையிலான போலீசார் திருத்தணி பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுப்பட்டனர். அப்போது திருத்தணி - அரக்கோணம் சாலையில் சந்தேகப்படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது அந்த நபர் வைத்திருந்த பையில் 100 மது பாட்டில்கள் இருந்தது தெரியவந்தது. விசாரணையில் மது பாட்டில்கள் கடத்தி வந்த நபர் திருத்தணி கரிமேடு பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 24) என தெரிந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் அவர் வைத்திருந்த 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.