< Back
மாநில செய்திகள்
திருவொற்றியூரில் விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த வாலிபர் தற்கொலை
சென்னை
மாநில செய்திகள்

திருவொற்றியூரில் விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
9 April 2023 11:31 AM IST

திருவொற்றியூரில் விவாகரத்து ஆகாத பெண்ணை மணக்க இருந்த நிலையில் வழக்கு தள்ளிபோனதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர் தியாகராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் யுகேஷ்குமார் (வயது 25). தனியார் நிறுவன ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இவர்களது விவாகரத்து வழக்கு தற்போது கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் விவாகரத்து ஆகாத அந்த இளம்பெண்ணை, யுகேஷ்குமார் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். தனது விருப்பத்தை பெற்றோரிடம் தெரிவிக்க, இருதரப்பு குடும்பத்தினரும் இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதற்காக கடந்த 11-4-22 அன்று இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வருகிற மே மாதம் 25-ந்தேதி இவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. அதற்குள் வழக்கு முடிந்து விவாகரத்து கிடைத்துவிடும் என எதிர்பார்த்தனர்.

அடுத்த மாதம் திருமணம் நடைபெற வேண்டிய நிலையில், அந்த பெண்ணுக்கு கணவருடனான விவாகரத்து வழக்கு முடியவில்லை. வழக்கு தள்ளிபோனது.

எனவே தனக்கு விவாகரத்து கிடைத்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என அந்த பெண், சில தினங்களுக்கு முன்பு யுகேஷ்குமாரிடம் கூறினார். இதனால் யுகேஷ்குமாருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதுெதாடர்பாக இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த யுகேஷ்குமார், நேற்று முன்தினம் வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டின் முதல் மாடியில் உள்ள யுகேஷ்குமார் அறை கதவு நீண்டநேரமாகியும் திறக்கப்படாமல் மூடி கிடந்தது. இதை பார்த்து சந்தேகம் அடைந்த பெற்றோர், மாடிக்கு சென்று பார்த்தபோது, யுகேஷ்குமார் மின்விசிறியில் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அவரை மீட்டு 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்தபோது யுகேஷ்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்