அரியலூர்
மது பாட்டில்களை கடத்திய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|மது பாட்டில்களை கடத்திய வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
அரியலூர் மாவட்டம், பெரியாத்துக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல். இவரது மகன் சுரேஷ் என்ற சவுந்தரராஜன் (வயது 35). இவர் கடந்த மாதம் 16-ந்தேதி இரவு சட்ட விரோதமாக மது பாட்டில்களை வாங்கி சாக்கு மூட்டையில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றார். அப்போது கருக்கை கிராமத்தில் நடத்திய மாவட்ட மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசாரின் வாகன சோதனையின் போது இருசக்கர வாகனத்தை விட்டு விட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து, இருசக்கர வாகனத்தில் இருந்து 40 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் தலைமறைவாகி இருந்த சுரேசை போலீசார் கைது செய்து, ஜெயங்கொண்டம் கிளை சிறையில் அடைத்தனர். ஏற்கனவே சுரேஷ் மீது 8 மது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனால் சுரேசை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ரமணசரஸ்வதி நேற்று உத்தரவிட்டார். பின்னர் ஜெயங்கொண்டம் கிளை சிறையில் இருந்த சுரேசை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை திருச்சி மத்திய சிறை அதிகாரிகளிடம் போலீசார் வழங்கினர்.