< Back
மாநில செய்திகள்
நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்

தினத்தந்தி
|
31 July 2023 2:37 AM IST

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

நாகர்கோவில்:

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் போதையில் ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கி ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

இளம்பெண் ரகளை

நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் காலையில் 28 வயதுடைய இளம்பெண் ஒருவர் பயணிகளிடம் ரகளையில் ஈடுபட்டார். மேலும் அவர் அணிந்திருந்த மேலாடையை திடீரென கழற்றியதால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த வடசேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அந்த இளம்பெண் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் என்பதும், அவர் மது போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும் அவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்ததாக கூறினார். தொடர்ந்து போலீசார் அவரை திருவனந்தபுரம் செல்லும் பஸ்சில் ஏற்றவிட முயன்றனர். ஆனால் அவர் பஸ்சில் செல்ல மறுத்தார்.

மதுபோதையில்...

இதையடுத்து அவரது உறவினர் ஒருவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உறவினர் வடசேரி பஸ் நிலையத்திற்கு வந்து இளம்பெண்ணை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் அவர் பேச்சையும் கேட்கவில்லை. பிறகு ஒருவழியாக அவர் அங்கிருந்து சென்றார்.

இந்தநிலையில் இரவு நேரத்தில் அந்த இளம்பெண் கோட்டார் ரெயில் நிலையத்தில் போதையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இவருடைய நிலைமையை கவனித்த ரெயில்வே போலீசார் சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இளம்பெண்ணையும், அவரது உறவினரையும் திருவனந்தபுரத்துக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் ரெயிலில் செல்ல மறுத்ததோடு, நடைமேடையில் உருண்டு புரண்டு ரகளை செய்தார். இதனை கண்ட ரெயில் பயணிகள் முகம் சுளித்தனர்.

குண்டுக்கட்டாக தூக்கி...

அவரது ரகளையை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திகைத்தனர்.

இதனை தொடர்ந்து மகளிர் போலீசார் மற்றும் இளம்பெண்ணின் உறவினர் சேர்ந்து அவரை குண்டுக்கட்டாக தூக்கி குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு இதே இளம்பெண் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் மது போதையில் தகராறில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்