செங்கல்பட்டு
கணவரை விட்டுவிட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
|கணவரை விட்டு விட்டு கள்ளக்காதலனுடன் சென்ற இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் புருஷோத்தமன். இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பகுதியை சேர்ந்த பவித்ரா (வயது 24) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 6 வயதில் மகள் உள்ளார். திருமணம் ஆவதற்கு முன்பு பவித்ரா பொத்தேரி கக்கன் தெருவை சேர்ந்த தமிழ்வாணன் (வயது 27) என்பவருடன் பழகி வந்ததாக தெரிகிறது.
திருமணத்திற்கு பிறகு பவித்ரா சென்னைக்கு சென்று விட்டதால், தமிழ்வாணனுடன் பேசுவதை நிறுத்தி கொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு தமிழ்வாணன் பவித்ராவுக்கு போன் செய்து பேசி உள்ளார். இதனால் மனம் மாறிய பவித்ரா மீண்டும் தமிழ்வாணனுடன் செல்போனில் பேசி பழகி வந்தார். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இதனால் தமிழ்வாணன், உன் கணவரை விட்டுவிட்டு குழந்தையுடன் என்னுடன் வந்து வந்துவிடு. நான் உன்னுடன் சேர்ந்து வாழ்கிறேன், உன்னையும் உன் குழந்தையையும் பார்த்து கொள்கிறேன் என்று அடிக்கடி போனில் ஆசை வார்த்தை கூறி பேசியுள்ளார். தனது மனைவி பவித்ராவுக்கு தமிழ்வாணனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதை அறிந்த புருஷோத்தமன் இது குறித்து சென்னை வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதனை தொடர்ந்து போலீசார் பவித்ராவை அழைத்து பேசி உள்ளனர். அப்போது இனிமேல் தமிழ்வாணனுடன் எந்தவிதமான தொடர்பும் வைத்து கொள்ள மாட்டேன் என்று போலீஸ் நிலையத்தில் பவித்ரா எழுதி கொடுத்து விட்டு சென்றார்.
மறுநாள் புருஷோத்தமன் தனது மனைவி பவித்ராவை காணவில்லை என்று மீண்டும் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பவித்ராவை அழைத்து விசாரித்தனர். அப்போது பவித்ரா நான் கணவர் புருஷோத்தமனனுடனும் போகமாட்டேன் கள்ளக்காதலன் தமிழ்வாணனுடனும் போகமாட்டேன். நான் என்னுடைய குழந்தையை பார்த்து கொள்கிறேன் என்று போலீஸ் நிலையத்தில் எழுதி கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதை தொடர்ந்து பவித்ரா கணவரை உதறி விட்டு 6 வயது மகளுடன் கள்ளக்காதலனை நம்பி பொத்தேரி சென்றார். அதன் பின்னர் கள்ளக்காதலன் தமிழ்வாணன் தனது கள்ளக்காதலியை தைலாவரத்தில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு வீடு பார்த்து வைத்து இருவரும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பவித்ரா தனது 6 வயது மகளை வீட்டுக்கு வெளியே விளையாடுவதற்காக விட்டுவிட்டு வீட்டிற்குள் சென்று கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறுமி விளையாடிவிட்டு வீட்டுக்கு சென்று நீண்ட நேரமாக கதவை தட்டியும் கதவு திறக்கப்படாததால் அழுது கொண்டே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கதவை அம்மா திறக்கவில்லை என்று கூறியுள்ளார். அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து பார்த்தபோது பவித்ரா தூக்கில் பிணமாக தொங்கிய நிலையில் காணப்பட்டார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூக்கில் தொங்கிய பவித்ராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் பவித்ராவின் தந்தை கோவிந்தராஜ் கூடுவாஞ்சேரி போலீசில் தனது மகள் பவித்ரா சாவில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால் எனது மகளை தமிழ்வாணன் சமீபத்தில் கொடுமைப்படுத்தி உங்கள் வீட்டிலிருந்து ரூ.10 லட்சம் பணம் வாங்கி வா என்று அடித்து உதைத்துள்ளார். தனது மகளுடன் பழகி வந்த தமிழ்வாணனை போலீசார் விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் தைலாவரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.