சென்னை
சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் வேன் மீது மோட்டார் சைக்கிள் மோதி இளம்பெண் பலி
|மீனம்பாக்கம், ஜூன்.30-சென்னை விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் பஞ்சராகி நின்ற வேன் மீது மோட்டார்சைக்கிள் மோதியதில் பெண் பலியானார். நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.
நண்பர்களுடன் சென்றார்
சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் பிரதீஷா (வயது 23). இவர், தன்னுடைய நண்பர்களான அனகாபுத்தூரை சேர்ந்த செல்வன் (26), கோபிநாத் (23) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு ஒரே மோட்டார் சைக்கிளில் காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் தங்கள் நண்பரை பார்த்துவிட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். மோட்டார்சைக்கிளை செல்வன் ஓட்டினார். நடுவில் பிரதீஷா அமர்ந்து இருந்தார். அவருக்கு பின்னால் கோபிநாத் அமர்ந்து பயணம் செய்தார்.
இளம்பெண் பலி
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலத்தில் சென்றபோது, அங்கு பேக்கரிக்கு பிஸ்கட், பிரட் வினியோகம் செய்யும் வேன் பஞ்சராகி நின்று கொண்டிருந்தது. அந்த வேன் மீது இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் நடுவில் உட்கார்ந்து இருந்த பிரதீஷா தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். செல்வன் மற்றும் கோபிநாத் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து பலியான பிரதீஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.