< Back
மாநில செய்திகள்
சூது கவ்வும் பட பாணியில் கடத்தல் நாடகம்... தாயிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண்
சென்னை
மாநில செய்திகள்

'சூது கவ்வும்' பட பாணியில் கடத்தல் நாடகம்... தாயிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண்

தினத்தந்தி
|
31 Dec 2022 11:09 AM IST

‘சூது கவ்வும்’ பட பாணியில் கடத்தல் நாடகமாடி தாயிடம் ரூ.50 ஆயிரம் பணம் பறிக்க முயன்ற இளம்பெண்ணின் ‘குட்டு’ வெளியானது.

வியாசர்பாடியை சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு தனது தாயின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு, தன்னை மர்மநபர்கள் சிலர் பூந்தமல்லியில் கடத்தி வந்து அடைத்து வைத்துள்ளதாகவும், ரூ.50 ஆயிரம் பணத்தை நேரடியாக கொண்டு வந்து கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாக கூறி மிரட்டுவதாகவும் மிகவும் பதற்றத்துடன் கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் தாய், இதுகுறித்து போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இதனால் உஷாரான போலீசார், உடனடியாக பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் செல்போன் அழைப்பிற்கு வந்த எண்ணை வைத்து விசாரணையில் இறங்கினர். அப்போது அந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு போலீசார் பேச்சு கொடுத்த போது, எதிர்தரப்பில் பேசிய மர்மநபர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால் போலீசாருக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதற்கிடையே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலை, மலையம்பாக்கம் அருகே தனியாக நின்று கொண்டிருந்த இளம்பெண்ணை போலீசார் மீட்டனர். அவரிடம் விசாரித்த போது, கோயம்பேட்டில் நின்ற போது, ஆட்டோவில் வந்த 2 பெண்களை கொண்ட 3 பேர் மர்மகும்பல் தன்னை கடத்தி சென்றதாகவும், பின்னர் பணம் கேட்டு மிரட்டிய நிலையில், தன்னை இங்கு இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சியில், கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணும், அவருடன் வந்த 2 தோழிகள் மற்றும் வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இறங்கி டீக்கடையில் அமர்ந்து ஜாலியாக டீ குடித்து விட்டு சென்றதும், பின்னர் தோழியின் செல்போனை வாங்கி கொண்டு இளம்பெண் தனியாக சென்று பேசுவதும், அதைத்தொடர்ந்து மீண்டும் மோட்டார் சைக்கிளில் ஏறிச்செல்வதும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது. இதையறிந்த போலீசார் அந்த பெண்ணிடம் கிடுகிடுப்பிடி விசாரணை மேற்கொண்டதில், நண்பர்களுடன் சென்று ஜாலியாக ஊர் சுற்றுவதற்கு அதிக பணம் தேவைப்பட்டதால், 'சூது கவ்வும்' சினிமா பட பாணியில் நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு கடத்தல் நாடகமாடி தனது தாயிடம் பணம் பறிக்க முயன்றதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து இளம்பெண் மற்றும் அவரது நண்பர்களை அழைத்த போலீசார் எச்சரிக்கை செய்து அறிவுரை கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்