திருநெல்வேலி
மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 5½ பவுன் நகை பறிப்பு
|வள்ளியூா் அருகே மொபட்டில் சென்ற இளம்பெண்ணிடம் 5½ பவுன் நகையை மர்மநபர் பறித்துச் சென்றார்.
வள்ளியூர் (தெற்கு):
வள்ளியூர் அருகே சவுந்திரபாண்டியபுரத்தைச் சேர்ந்தவர் ரூபசேகர். இவர் வடக்கன்குளம் தனியார் வங்கியில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி திவ்யா (வயது 31), காவல்கிணற்றில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. நர்சிங் படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது மொபட்டில் தெற்கு கள்ளிகுளத்துக்கு சென்று, வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கினார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்மநபர்கள் திடீரென்று திவ்யாவின் மொபட்டை வழிமறித்தனர். பின்னர் அவர்கள், திவ்யாவின் கழுத்தில் அணிந்திருந்த 5½ பவுன் தங்க தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இளம்பெண்ணிடம் நகை பறித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.