< Back
மாநில செய்திகள்
திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி
திருவள்ளூர்
மாநில செய்திகள்

திருத்தணியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம்பெண் பலி

தினத்தந்தி
|
12 Sept 2023 12:10 PM IST

திருத்தணியில் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி இளம்பெண் உயிரிழந்தார்.

செல்போன் விற்பனை பிரதிநிதி

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே தெக்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு சுபா (வயது 25) என்ற மகளும் கரண் (23) என்ற மகனும் இருந்தனர். இவர்கள் இருவரும் திருத்தணி-அரக்கோணம் சாலையில் உள்ள செல்போன் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். வண்டியை சுபாவின் தம்பி கரண் ஓட்டியுள்ளார். சுபா பின்னால் அமர்ந்து இருந்து வந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் மோதல்

திருத்தணி-சித்தூர் சாலையில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது அதே சாலையில் இடதுபுறத்தில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கரண் ஓட்டிச் சென்ற வாகனத்துடன் மோதியது. இதனால் கரண் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி விபத்திற்குள்ளானது. மோதிய வேகத்தில் பின்னால் அமர்ந்திருந்த சுபா சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்த கோர விபத்தில் கரண், சுபா ஆகிய இருவரும் படுகாயமடைந்து ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்தனர்.

சிகிச்சைக்கு அனுமதி

அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.திருத்தணி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுபாவின் உடல்நிலை மோசமானது. இதனால் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இளம்பெண் பலி

இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அங்கு திரண்டிருந்த சுபாவின் பெற்றோர் உள்பட உறவினர்கள் கதறி அழுதனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகம் சோகத்தில் மூழ்கியது.இந்த விபத்து குறித்து கரண் அளித்த புகாரின் பேரில், திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி விபத்திற்கு காரணமான மர்மநபரை தேடி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் பெண் உயிரிழந்த சம்பவம் திருத்தணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்