கடலூர்
இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபர்
|கடலூர் பஸ் நிலையத்தில் இளம்பெண்ணிடம் நகை பறித்த வாலிபர் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
கடலூர்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள பெரிய கண்ணாடியை சேர்ந்தவர் கோவிந்தராசு. இவரது மகள் கீதா(வயது 22). இவர் புதுச்சேரி மாநிலம் மதகடிப்பட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் வேலைக்கு செல்வதற்காக கீதா பெரியகண்ணாடியில் இருந்து கடலூர் வந்தார். பின்னர் அவர் புதுச்சேரி செல்லும் பஸ்சுக்காக கடலூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், திடீரென கீதா அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடினார். இதில் பதறிய கீதா திருடன் திருடன் என கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவரை திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர், சீர்காழி அருகே உள்ள தாண்டவன்குளத்தை சேர்ந்த ஸ்ரீதர் மகன் ராம்குமார்(32) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்குமாரை கைது செய்தனர். பட்டப்பகலில் இளம்பெண்ணிடம் வாலிபர் நகையை பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.