சென்னை
செயற்கை முறையில் குழந்தை பெற தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் சாவு- உறவினர்கள் ஆர்ப்பாட்டம்
|செயற்கை முறையில் குழந்தை பெற தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற இளம்பெண் உயிரிழந்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் சென்னை எழும்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் செயற்கை முறையில் குழந்தை பெறுவதற்கு ரூ.5 லட்சம் வரை செலுத்தி சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில் அவரது கர்ப்பப்பையில் நீர்கட்டிகள் இருப்பதாக கூறி திரு.வி.க. நகரில் உள்ள அந்த ஆஸ்பத்திரியின் கிளை ஆஸ்பத்திரியில் திவ்யாவுக்கு ஆபரேஷன் செய்தனர். அதன்பிறகு அவர் சுயநினைவு இழந்ததால் சேத்துப்பட்டில் உள்ள மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை திவ்யா உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த திவ்யாவின் உறவினர்கள் திரு.வி.க நகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டனர். தவறான சிகிச்சை அளித்ததால் திவ்யா இறந்ததாகவும், சம்பந்தப்பட்ட டாக்டர்கள் விளக்கம் கூறும்வரை திவ்யா உடலை வாங்க மாட்டோம் எனவும் தெரிவித்தனர். உதவி கமிஷனர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட அவர்கள், ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது ேபாலீசில் புகார் கொடுக்க உள்ளதாக கூறிவிட்டு கலைந்து சென்றனர்.