சென்னை
அமைந்தகரையில் திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து - கள்ளக்காதலன் கைது
|திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்திய கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அமைந்தகரை, அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 33). கார் டிரைவரான இவர், மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் அதே பகுதியை சேர்ந்த அம்மு (27) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அம்முவும் ஏற்கனவே திருமணம் ஆனவர். அவரது கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். பின்னர் ஏழுமலையுடன் சேர்ந்து ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வசித்து வந்தார்.
இந்தநிலையில் ஏழுமலை தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அம்முவிடம் கூறினார். அதற்கு அம்மு மறுத்தார். ஆனாலும் ஏழுமலை, விடாமல் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு இது தொடர்பாக அவர், அம்முவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த ஏழுமலை, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கள்ளக்காதலி அம்முவை சரமாரியாக குத்தினார். இதில் கை, கால், முகம் ஆகிய பகுதிகளில் கத்திக்குத்து விழுந்ததால் படுகாயம் அடைந்த அம்மு, அலறியபடி மயங்கினார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம், பக்கத்தினர் அம்முவை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அரும்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.