< Back
மாநில செய்திகள்
முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-வது திருமணம் செய்த இளம்பெண்
மாநில செய்திகள்

முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-வது திருமணம் செய்த இளம்பெண்

தினத்தந்தி
|
19 July 2024 5:37 AM IST

முதல் திருமணத்தை மறைத்து வாலிபரை 2-வது திருமணம் செய்த இளம்பெண் கைது செய்யப்பட்டார்.

கரூர்,

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள எலவனூர் கதர்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 27). இவருக்கும், கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியை சேர்ந்த கிருத்திகா (25) என்பவருக்கும் கடந்த 2020-ல் திருமணம் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு செல்வக்குமார் புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் தனது குடும்பத்துடன் தங்கி, நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இந்தநிலையில் கிருத்திகா அடிக்கடி தனது தாய் பாலாமணியை பார்க்க செல்வதாக கூறி, கோவைக்கு சென்று வந்துள்ளார்.

இதுகுறித்து கேட்ட செல்வக்குமாருக்கும், கிருத்திகாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு தனது தாய் பாலாமணியை பார்க்க செல்வதாக கூறிவிட்டு, கதர்மங்கலத்தில் உள்ள செல்வக்குமார் வீட்டிற்கு கிருத்திகா சென்றுள்ளார். அங்கு பீரோவில் இருந்த நகை-பணத்தை கிருத்திகா எடுத்து சென்று விட்டதாக, செல்வக்குமாருக்கு, அவரது தந்தை துரைசாமி கூறியுள்ளார். இதையடுத்து செல்வக்குமார், கிருத்திகாவை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அழைப்பை ஏற்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த செல்வக்குமார் கோவையில் உள்ள கிருத்திகாவின் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது, வீட்டை காலி செய்துவிட்டு, அவர் சென்று விட்டதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளனர். பின்னர் அங்குள்ள உறவினர்கள் வட்டாரத்தில் விசாரித்தபோது, செஞ்சேரிமலை பகுதியில் கிருத்திகா தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து செல்வக்குமார் அங்கு சென்று கிருத்திகாவை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். ஆனால் அதற்கு கிருத்திகா மறுத்துள்ளார்.

மேலும், கிருத்திகாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, முதல் கணவரிடம் விவாகரத்து பெறாமலேயே செல்வக்குமாருடன் குடும்பம் நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கிருத்திகாவிற்கு திருமணத்தின்போது செல்வக்குமார் கொடுத்த தங்க நகை மற்றும் பணம் ஆகியவற்றை கேட்டபோது, தன்னை துன்புறுத்தியதாக போலீசில் புகார் அளிப்பேன் என்று கிருத்திகா மிரட்டி உள்ளார். மேலும் செல்வக்குமாரிடம் பணம் பறிக்கும் நோக்கில் கிருத்திகா பல்லடம் சார்பு நீதிமன்றத்தில் ஜீவனாம்சம் கேட்டு வழக்கு தொடர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து அரவக்குறிச்சி நீதிமன்றத்தில், செல்வக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், கிருத்திகா தனது முதல் திருமணத்தை மறைத்து, விவாகரத்து பெறாமலேயே என்னை 2-வதாக திருமணம் செய்து கொண்டு, எனது நகை, பணம் ஆகியவற்றை எடுத்துச் சென்றுவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை முடிவடைந்ததையடுத்து கிருத்திகாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து கிருத்திகா மீது சின்னதாராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து, அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்