< Back
மாநில செய்திகள்
கள்ளக்காதலனை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்த வடமாநில இளம்பெண்
மாநில செய்திகள்

கள்ளக்காதலனை தேடி கந்தர்வகோட்டைக்கு வந்த வடமாநில இளம்பெண்

தினத்தந்தி
|
26 Jun 2024 8:30 AM IST

வடமாநில இளம்பெண், வாலிபருடன் தொடர்பில் இருந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே ஒரு கிராமத்தை சோ்ந்த 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், கடந்த ஓரிரு வருடங்களுக்கு முன்பு மத்தியபிரதேச மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றார். அங்கு 23 வயதுடைய ஒரு இளம்பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண்ணுக்கு திருமணமாகியிருந்தது. இருப்பினும் வாலிபர், அந்த இளம்பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார்.

வடமாநிலம் சென்ற வாலிபர் அங்கு இந்தி மொழி கற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் சகஜமாக பழகியிருக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பு மத்தியபிரதேசத்தில் இருந்து கந்தர்வகோட்டைக்கு அந்த வாலிபர் வந்தார். தொடர்ந்து வடமாநிலத்தை சேர்ந்த அந்த இளம்பெண், வாலிபருடன் தொடர்பில் இருந்து செல்போனில் பேசி வந்துள்ளார்.

இந்த நிலையில் அந்த இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து தனியாக புறப்பட்டு கள்ளக்காதலனை தேடி கந்தா்வகோட்டைக்கு வந்தார். அங்கு வாலிபாின் வீட்டில் கடந்த 4 நாட்களாக தங்கியிருந்தார். இதற்கிடையில் மனைவியை காணவில்லை என அந்த இளம்பெண்ணின் கணவர் அம்மாநில போலீசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் காணாமல்போன இளம்பெண் தமிழகத்தில் கந்தர்வகோட்டையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த இளம்பெண்ணின் கணவர் மற்றும் பெற்றோருடன் தமிழகத்திற்கு புறப்பட்டு வந்தார். அவர்களுடன் மத்தியபிரதேச மாநில போலீசாரும் உடன் வந்தனர். அவர்கள் கந்தர்வகோட்டை போலீஸ் நிலையத்திற்கு நேற்று வந்து நடந்த விவரத்தை தெரிவித்தனர்.

இதையடுத்து அந்த கிராமத்திற்கு போலீசாரும், அந்த இளம்பெண்ணின் கணவரும் சென்றனர். அங்கு வாலிபர் வீட்டில் இருந்த இளம்பெண்ணை மீட்டு கந்தர்வகோட்டை போலீஸ் நிலையம் அழைத்து வந்தனர். வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த இளம்பெண் விருப்பப்பட்டு வந்ததாகவும், தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினார்.

மேலும் கணவருடன் அந்த இளம்பெண்ணை அனுப்பி வைக்க அவர் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணும் கணவருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதையடுத்து இளம்பெண்ணை போலீசார் மீட்டு அவரது கணவருடன் மத்தியபிரதேசத்திற்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்தனர். மனைவி தனக்கு திரும்ப கிடைத்த மகிழ்ச்சியுடன் அவரை கணவர் அழைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

கள்ளக்காதலனை தேடி மத்தியபிரதேச மாநில இளம்பெண் கந்தர்வக்கோட்டைக்கு வந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்