காஞ்சிபுரம்
தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரெயில் மோதி இளம்பெண் பலி
|வண்டலூர்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியை சேர்ந்தவர் செல்சியா (வயது 23), இதைபோல அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் யாழினி (23), தோழிகளான இவர்கள் இருவரும் சென்னையில் தங்கி தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் ஊரப்பாக்கத்தில் உள்ள தங்களது தோழிகளை பார்க்க வந்தனர்.
அப்போது ஊரப்பாக்கம் ரெயில்வே நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த மின்சார ரெயில் செல்சியா, யாழினி ஆகியோர் மீது மோதியது. இதில் செல்சியா பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த யாழினியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தாம்பரம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதைபோல் பெங்களூருவில் இருந்து சென்னை தாம்பரம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு கடந்த 28-ந் தேதி தமிழக அரசு பஸ் வேலூர், காஞ்சீபுரம், வாலாஜாபாத் வழியாக வந்து கொண்டிருந்தது. காஞ்சீபுரம் மாவட்டம் ஒரகடம் பஸ் நிறுத்தம் வந்தபோது பஸ்சை டிரைவர் நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த லாரி பஸ் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்தவர்கள் பஸ்சுக்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தவர்கள் கல்லூரி மாணவர்கள் என மொத்தம் 16 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் செங்கல்பட்டு மற்றும் ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் வாலாஜாபாத் வல்லப்பாக்கம் பகுதியை சேர்ந்த காஞ்சனா (வயது 38), என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.