< Back
மாநில செய்திகள்
காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை - வேலூரில் சோகம்
மாநில செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை - வேலூரில் சோகம்

தினத்தந்தி
|
5 March 2024 7:16 AM IST

வேலூரில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்டனர்.

வேலூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே திப்பசமுத்திரம் கீழ் கிருஷ்ணாபுரம் கிழக்கு கிணற்றுத் தெருவை சேர்ந்தவர் ரவி, ஓய்வு பெற்ற டாஸ்மாக் ஊழியர். இவரது மனைவி ராஜலட்சுமி. இவர்களின் மகன் பூவரசன் (வயது 26) டிரைவராக பணியாற்றி வந்தார்.

பள்ளிகொண்டாவை அடுத்த கந்தனேரி அருகே கழனிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி தாமரைச்செல்வி. இவர்களின் மகள் ஐஸ்வர்யா (25). பூவரசனும், ஐஸ்வர்யாவும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர் இதனைத்தொடர்ந்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி பூவரசனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் கணவன்-மனைவி இருவரும் பூவரசன் வீட்டில் வசித்து வந்தனர்.

பூவரசனின் பெற்றோர் நேற்று முன்தினம் வெளியூருக்கு சென்றிருந்தனர். கணவன்-மனைவி இருவரும் வீட்டில் இருந்தனர் அப்போது ஐஸ்வர்யா தெரிந்தவர்களின் வீட்டு நிகழ்ச்சிக்காக வெளியே அழைத்துச் செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு பூவரசன் மறுத்துவிட்டு வெளியில் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

சிறிது நேரம் கழித்து பூவரசன் வீட்டுக்கு வந்தபோது அறை தாழிடப்பட்டதை கண்டு ஜன்னல் வழியாக பார்த்தபோது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த பூவரசன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து ஐஸ்வர்யாவை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்துவிட்டு ஏற்கனவே ஐஸ்வர்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில் காதல் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பூவரசனை மிகவும் பாதித்தது. மருத்துவமனையில் அழுது புரண்டு மிகவும் துக்கத்தில் இருந்தார். உறவினர்கள் பூவரசனுக்கு ஆறுதல் கூறினர். மேலும் ஐஸ்வர்யாவின் பெற்றோரும் பூவரசனின் பெற்றோரும் ஆறுதல் கூறினர். இருப்பினும் கதறி அழுதபடியே பூவரசன் இருந்தார்.

நேற்று அதிகாலை குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவின் உடல் வைக்கப்பட்டிருந்த பிணவறை அருகே சுற்றி சுற்றி வந்த பூவரசன் உறவினர்களிடம் கழிவறைக்கு செல்வதாக தெரிவித்துள்ளார். கழிவறைக்கு சென்றவர் பின்னர் வரவில்லை.

இதனையடுத்து உறவினர்கள் சென்று பார்த்த போது பூவரசன் கழிவறையில் இருந்த கழிவறையை சுத்தம் செய்யும் திராவகம் (ஆசிட்) குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். உடனடியாக உறவினர்கள் அவரை அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சற்று நேரத்தில் சிகிச்சை பலனின்றி பூவரசன் பரிதாபமாக இறந்தார்.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்ஜோடி ஒருவர் பின் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து இருதரப்பு உறவினர்களும் கதறி அழுத வண்ணம் மருத்துவமனையில் குவிந்தனர்.

ஐஸ்வர்யா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பூவரசன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் கவிதா விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்