சேலம்
டாஸ்மாக்கில் மது வாங்கி வந்த தொழிலாளியிடம் வழிப்பறி
|சேலத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி வந்த தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலத்தில் டாஸ்மாக்கில் மது வாங்கி வந்த தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
பணம் பறிப்பு
சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 49). கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் பழைய பஸ்நிலையம் அருகேயுள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது வாங்கிக்கொண்டு நடந்து வந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 2 பேர் திடீரென அவரை வழிமறித்து மிரட்டி ரூ.1,800-ஐ பறித்து சென்றனர். இதுகுறித்து டவுன் போலீஸ் நிலையத்தில் பொன்னுசாமி புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் வழிப்பறியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். அதில், தொழிலாளி பொன்னுசாமியிடம் பணத்தை வழிப்பறி செய்தது, கிச்சிப்பாளையம் சுண்ணாம்பு சூளை பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (27), ஏத்தாப்பூர் அஜித் (26) என்பது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
இதேபோல், சேலம் சிவதாபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபதி (42). இவர், கொண்டலாம்பட்டி அருகேயுள்ள ஒரு ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்தார். அப்போது, அங்கிருந்த மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பூபதி வைத்திருந்த பணத்தை பறிக்க முயன்றார்.
ஆனால் அந்த நபரின் கைக்கு பணம் சிக்காததால் அங்கிருந்து தப்பித்து ஓடிவிட்டார். இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் பூபதி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில், பணத்தை பறிக்க முயன்றது, நெய்காரப்பட்டியை சேர்ந்த ராஜேந்திரன் (31) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.