அரியலூர்
லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி பலி
|லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி உயிரிழந்தார்.
தா.பழூர்:
தொழிலாளி
அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி காலனி தெருவை சேர்ந்த கலியபெருமாளின் மகன் சதீஷ்குமார்(வயது 32). கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெயங்கொண்டம்-கும்பகோணம் சாலையில் தா.பழூர் கடைவீதி பகுதியில் நடந்து வந்தார்.
அப்போது பின்னால் கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த லாரி, சதீஷ்குமார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சதீஷ்குமார் மீது லாரியின் முன் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
டிரைவர் கைது
இது பற்றி தகவல் அறிந்த தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சதீஷ்குமாரின் உடலை கண்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர்.
இதற்கிடையே லாரி டிரைவர் இளங்கோவன், போலீசில் லாரியை ஒப்படைத்து சரணடைந்தார். இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து டிரைவர் கடலூரை சேர்ந்த இளங்கோவனை கைது செய்தனர்.
லாரி மோதி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.