திண்டுக்கல்
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
|கொடைரோடு அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
திண்டுக்கல் அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் செல்வமணி (வயது 52). சின்னாளப்பட்டியை அடுத்த செட்டியபட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் (45). கூலித்தொழிலாளிகளான இவர்கள் 2 பேரும், திண்டுக்கல்லில் இருந்து மதுரை மாவட்டம் வாடிப்பட்டி நோக்கி வேலைக்காக மோட்டார் சைக்கிளில் நேற்று முன்தினம் சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செல்வமணி ஓட்டினார். பின்னால் அய்யப்பன் அமர்ந்திருந்தார்.
கொடைரோடு அருகே, திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் ஜல்லிப்பட்டி பிரிவு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் வந்த செல்வமணி, அய்யப்பன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்வமணி உயிரிழந்தார். அய்யப்பனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து அம்மையநாயக்கனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.