விழுப்புரம்
விழுப்புரம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி சாவு
|விழுப்புரம் அருகே தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு அருகே உள்ள மோட்சகுளம் காலனி பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 60). கூலி தொழிலாளி. இவரும், இவருடைய மனைவி ஏசகம் (55) என்பவரும் தமிழக அரசால் கட்டிக்கொடுக்கப்பட்ட ஆதிதிராவிட தொகுப்பு வீட்டில் வசித்து வந்தனர். இந்த தொகுப்பு வீடுகள் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிக்கொடுக்கப்பட்டன.
தற்போது இந்த தொகுப்பு வீடுகளில் மேற்கூரைகள் சேதமடைந்து வலுவிழந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் பலமுறை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டு வந்தனர். இருப்பினும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேற்கூரை இடிந்து...
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜமாணிக்கமும், அவரது மனைவி ஏசகமும் வீட்டில் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை அவரது வீட்டின் மேற்கூரை சிமெண்டு காரைகள் திடீரென பெயர்ந்து ராஜமாணிக்கத்தின் தலையில் விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி ஏசகம் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
இதுகுறித்த தகவல் அறிந்த விழுப்புரம் தாசில்தார் வேல்முருகன் மற்றும் வளவனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் ராஜமாணிக்கத்தின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொகுப்பு வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
விரைந்து சீரமைக்க கோரிக்கை
இந்த தொகுப்பு வீடுகளை புதுப்பிக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் சரியாக புதுப்பிக்கும் பணியை மேற்கொள்ளாததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். மேலும் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க அப்பகுதியில் சேதமடைந்த நிலையில் காணப்படும் தொகுப்பு வீடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைந்து சீரமைக்க வேண்டுமென அங்குள்ள மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.