காஞ்சிபுரம்
ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற ராட்சத காந்தத்தில் சிக்கி தொழிலாளி சாவு
|ஸ்ரீபெரும்புதூர் அருகே லாரியில் ஏற்றி சென்ற ராட்சத காந்தத்தில் சிக்கி லிப்ட் கேட்டு சென்ற தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
லிப்ட் கேட்டு சென்றார்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் இருந்து 10 டன் எடையுள்ள ராட்சத காந்தம் கனரக லாரி மூலம் கரூர் நோக்கி கொண்டு செல்லப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் ஒரகடம் சந்திப்பில் வல்லக்கோட்டை பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி முருகேஸ் (வயது 49) லிப்ட் கேட்டு காந்தம் ஏற்றி செல்லும் லாரியில் ஏறியுள்ளார்.லாரி சிறிது தூரம் சென்ற போது சாலையில் உள்ள சிறு பள்ளத்தில் இறங்காமல் இருக்க டிரைவர் பாபு பிரேக் பிடித்தார்.
சாவு
பிரேக் பிடித்த அதிர்வில் ராட்சத காந்தம் வேகமாக முன்னால் நகர்ந்தது. இதில் சிறு இடைவெளியில் அமர்ந்திருந்த முருகேஸ் மீது மோதியது. இதில் அவர் ராட்சத காந்தத்தின் இடையில் அவர் சிக்கி கொண்டார். டிரைவர் லாரியை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டு ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் உடனடியாக ஆம்புலன்சு மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ராட்சத காந்தத்தின் இடையில் சிக்கிய முருகேஸை மீட்டனர் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பரிசோதனை செய்ததில் முருகேஸ் உயிரிழந்து விட்டது தெரிய வந்தது.
ஸ்ரீபெரும்புதூர் போலீசார் முருகேஸின் உடலை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.