சென்னை
தரமணியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணம் கொள்ளை; இளம்பெண் கைது
|வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொன்று நகை, பணத்தை கொள்ளையடித்ததாக மாடி வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
சென்னை தரமணி எம்.ஜி.நகர் கம்பர் தெருவைச் சேர்ந்தவர் சாந்தகுமாரி (வயது 56). இவருக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார்கள். சாந்தகுமாரி மட்டும் தனியாக தரமணியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இவருடைய 2-வது மகள் உஷா, பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை நீண்டநேரம் ஆகியும் சாந்தகுமாரி வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் உஷாவின் மகன், தனது பாட்டி சாந்தகுமாரியை பார்க்க வீட்டுக்கு சென்றார். கதவு திறந்து கிடந்ததால் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு சாந்தகுமாரி கீழே விழுந்து கிடந்தார். இதுபற்றி தனது தாயாரிடம் கூறினார். உடனடியாக உஷா, ஓடிச்சென்று பார்த்தார். அங்கு தனது தாய் சாந்தகுமாரி ரத்தக்காயத்துடன் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.
நகை-பணம் கொள்ளை
இது குறித்து தரமணி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கொலையான சாந்தகுமாரி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவரது வீட்டில் சோதனை நடத்தினர். அதில் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.3½ லட்சம் மற்றும் நகை கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. மர்மநபர்கள், வீட்டில் தனியாக இருந்த சாந்தகுமாரியை கொன்றுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இளம்பெண் கைது
மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சாந்தகுமாரி வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஸ்ரீஜா(20) என்பவர்தான் சாந்தகுமாரியை கொலை செய்தது தெரியவந்தது.
சாந்தகுமாரி வீட்டின் மாடியில் உள்ள வீட்டில் ஸ்ரீஜா வாடகைக்கு வசித்து வந்தார். இதற்கிடையில் அந்த வீட்டை வேறு ஒருவருக்கு ரூ.3½ லட்சத்துக்கு குத்தகைக்கு விட முடிவு செய்த சாந்தகுமாரி, இதற்காக அந்த நபரிடம் பணத்தை வாங்கிவிட்டார். இதனால் ஸ்ரீஜாவை உடனடியாக வீட்டை காலி செய்யும்படி கூறி இருந்ததாக தெரிகிறது.
கீழே தள்ளினார்
இந்தநிலையில் நேற்று காலை வீட்டை காலி செய்த ஸ்ரீஜா, சாந்தகுமாரி வீட்டுக்குள் நைசாக புகுந்து, ரூ.3½ லட்சத்தை திருடினார். இதனை சாந்தகுமாரி பார்த்துவிட்டார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஸ்ரீஜா, சாந்தகுமாரியை பிடித்து கீழே தள்ளினார். இதில் படுகாயம் அடைந்த சாந்தகுமாரி பரிதாபமாக இறந்தார்.
பின்னர் வீட்டில் இருந்த நகை மற்றும் ரூ.3½ லட்சத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ஸ்ரீஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.