வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வெட்டிக் கொன்று நகை கொள்ளை - கோவையில் பரபரப்பு
|ரேணுகாவை கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கோவை,
கோவையை அடுத்த நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே பாலாஜி நகரை சேர்ந்தவர் மனோகர் (வயது 55), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ரேணுகா (40). இவர் அங்குள்ள தனியார் மில்லில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
மனோகர் தனது மகள்களுக்கு புதிய துணி வாங்கினார். அதை தைப்பதற்காக நேற்று பிற்பகல் 12 மணியளவில் மனோகரன் தனது மகள்களை அழைத்துக்கொண்டு காந்திபுரத்தில் உள்ள டெய்லர் கடைக்கு வந்தார். அங்கு துணிகளை தைக்க கொடுத்துவிட்டு 3 பேரும் வீடு திரும்பினார்கள்.
அவர்கள் பிற்பகல் 3.30 மணிக்கு வீட்டுக்கு சென்றபோது கதவு திறந்து கிடந்தது. மனோகர் தனது மனைவியின் பெயரை அழைத்தபடி வீட்டுக்குள் சென்றார். அப்போது அங்குள்ள அறையில் ரத்தக்கறை படிந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் மற்றொரு அறையில் பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ரேணுகா மயங்கி கிடந்தார்.
உடனே அவர் இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசா ருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத் துக்கு விரைந்து சென்றனர். பின்னர் 108 ஆம்புலன்சு வரவழைக்கப் பட்டது. அதில் இருந்த மருத்துவ நிபுணர்கள் ரேணுகாவை பரிசோதித்தபோது அவர் உயிரிழந்து விட்டது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அதில் வீட்டில் தனியாக இருந்த ரேணுகாவை மர்ம ஆசாமிகள் அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு அவர் அணிந்து இருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரேணுகாவை கொலை செய்த மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.
இது குறித்து போலீசார் கூறும்போது, ரேணுகா தனியாக இருந்ததை அறிந்த மர்ம ஆசாமிகள், அவரிடம் தண்ணீர் கேட்பது போன்று வீட்டுக்குள் வந்து உள்ளனர். பின்னர் அவர்கள் ரேணுகாவை கொலை செய்துவிட்டு, நகையை பறித்துவிட்டு தப்பி ஓடியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. தப்பி ஓடிய கும்பலை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது என்றனர்.
வீட்டில் தனியாக இருந்த பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.